Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் திரைவிமர்சனம்

Written By Raveendran on Saturday, May 29, 2010 | Saturday, May 29, 2010

சீறிப்பாயும் அரேபியக் குதிரை, இரண்டுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், அழகிய தொப்பி, அசத்தலான கோட் சூட், ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் என ஜெய்சங்கர் காலத்திற்குப் பின் தமிழ் சினிமாவில் கவுபாய் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். 
இந்த ஒரு காரணத்திற்காகவே இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தை பாராட்டலாம். இந்த ஒரு காரணம் மட்டுமல்ல... நாம் இழந்த நம் இலங்கை சொந்தங்களையும் கூட இலைமறை காயாக ஆங்காங்கே ஞாபகப்படுத்தி நம் உணர்வுகளை தூண்டி விட்டிருக்கிறார் வம்பு! சாரி... சிம்பு!

கதைப்படி நம்மூரில் கிழடு கட்டை என்போமே.... அதுமாதிரி வயசான நாசரை கிழக்கு கட்டை எனும் பெயரில் உலவ விட்டு, அவரது ராஜ்யத்தின் கிழ் பல பகுதிகளை வாழ விட்டிருக்கிறார். அப்படி ஒரு அடிமை பகுதியில் வசிக்கும் சிங்கம் லாரன்ஸ், நாசரை எதிர்க்கிறார். இந்நிலையில் அவர் காணாமல் ‌‌போக, சிங்கத்திற்கு ஆதரவானவர்கள் ஒன்று கூடி, வேறு ஒரு ஏரியாவில் சிங்கம் கெட்-அப்பிலேயே இருக்கும் சிங்காரத்திற்கு சிங்கம் வேஷம் போட்டு, அழைத்து வருகின்றனர். சிங்கம் மாதிரி கவுபாய் கெட்-அப் கொடுத்து அழைத்து வரப்படும் மற்றொரு லாரன்ஸ் நிஜத்தில் பயந்தாங்கொல்லி. அவர் கிழக்குகட்டை நாசரை எதிர்த்து ராஜ்ஜியத்தை கைப்பற்றினாரா, அல்லது அடிபணிந்து அடிமை மக்களை மேலும் அடிமையாக்கினாரா? என்பது மீதிக்கதை! இதனூடே பத்மப்ரியா, லட்சுமி ராய், சந்தியா ஆகிய மூன்று நாயகிகளுடனும் லாரன்ஸ் சலிக்க சலிக்க டூயட் பாடி ஆடுவது கலர்புல் களேபரம்!

இரண்டு லாரன்ஸ்களும் தங்கள் கவுபாய் பங்கை கலக்கலாக செய்திருக்கின்றனர். அவரை மாதிரியே கதாநாயகிகள் பத்ம்பரியா, லட்சுமிராய், சந்தியா உள்ளிட்டவர்களும் தங்கள் பணியை பக்காவாக செய்திருக்கிறார்கள். கலக்கல் கவர்ச்சி மூலம் உடம்பை சிலிர்க்க வைக்கிறார்கள். நாயகர், நாயகிகளைப் போன்றே வில்லன் நாசர், வி.‌எஸ்.ராகவன், மனோரமா, டெல்லிகணேஷ், சாய்குமார், எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்களும் சபாஷ் சொல்ல வைக்கின்றனர். அதிலும் செவ்விந்தியராக வரும் எம்.எஸ்.பாஸ்கரும், அவரது மொழிப்பெயர்ப்பாளராக வரும் சாம்சும், அவர்கள் பேசும் பாஷையும் செம காமெடி... சரவெடி! இயற்கை உபாதைகளை எல்லாம் காமெடி ஆக்க முயற்சித்திருப்பது உள்ளிட்ட ஒருசில உவ்வே விஷயங்கள் தவிர, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஓ.கே.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும், அழகப்பனின் ஒளிப்பதிவும், முத்துராஜின் கலை இயக்கமும் இப்படத்திற்கு பெரிய பலம். சிம்புதேவனின் இயக்கத்தில் 23ம் புலிகேசி அளவு இரும்பு ‌கோட்டை முரட்டு சிங்கம் இல்லை என்றாலும்... மோசமும் இல்லை.


மொத்தத்தில் இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் Dool....
Saturday, May 29, 2010 | 0 comments

சுறா திரைவிமர்சனம்

Written By Raveendran on Thursday, May 20, 2010 | Thursday, May 20, 2010


இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் யாழ் குப்பத்து மீனவர்கள். மழையில் வெள்ளத்திலும் கோடையில் அனலிலும் ஓலைக் குடிசையில் வாழும் அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பது அந்த குப்பத்து இளைஞன் சுறாவின் ஆசை. குப்பத்து மக்களுக்கு எல்லாமும் அவர்தான். அவர் விரல் நீட்டும் திசைநோக்கி நடப்பார்கள். வீட்டுப் பிரச்னையிலிருந்து ஊர் பிரச்னை வரை தீர்த்து வைப்பதும் சுறாதான்.
 

 வீடுகட்டும் கனவில் சுறா மிதந்து கொண்டிருக்கும்போது வில்லன் ரூபத்தில் வருகிறது பிரச்னை. புறம்போக்கு நிலமான யாழ் குப்பத்தை வளைத்துப்போட்டு அதில் வேடிக்கை விளையாட்டு பூங்கா அமைக்க ஆசைப்படுகிறார் வில்லன் தேவ் கில்.  அதிகாரம், ஆள், பணம் என்ற முப்பெரும் பலம் வாய்ந்த மந்திரி, அதற்கு தடையாக இருக்கும் சுறாவை அழிக்க ஆள் அனுப்புகிறார். அது முடியாமல் போகவே, குப்பத்துக்கு தீவைத்து சாம்பலாக்குகிறார். அந்த நெருப்பில் சுறாவையும் தள்ளி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

நெருப்பிலிருந்து உயிர்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போன்று சுறா, அந்த நெருப்பிலிருந்து புதிதாக புறப்பட்டு வருகிறார். அந்த பக்கம் பண முதலையும், இந்த பக்கம் சூறாவளி சுறாவும் நிற்கிறார்கள். அப்புறம் ஆரம்பிக்கும் ஆக்ஷன் சுனாமி, அதிரடி சரவெடி.  புயலால் நடுக்கடலில் சிக்கிய மீனவர்களை காப்பாற்றிய சுறா, கடலில் மூழ்கிவிட, மக்கள் கரையில் பரிதவித்து நிற்கும்போது நீந்தியே கரையேறும் சுறா விஜய்யின் அறிமுகமே அமர்க்களமாக துவங்குகிறது. அம்மாவிடம் அன்பு, மீனவ மக்களிடம் பணிவு, எதிரிகளிடம் கடுமை, தமன்னாவிடம் காதல், வடிவேலுவிடம் காமெடி என வெரைட்டி மீல்ஸ் பரிமாறுகிறார் விஜய்.

அம்மாவுக்கு தானே மீன் குழம்பு வைத்து சாப்பாடு போடுவதில் அன்பு தெரிகிறது. ரேஷன் கார்டை அடகுவைத்து குடிக்கும் குடிமகனை திருத்தி அவன் மனைவியிடம் ஒப்படைக்கும்போது கனிவு தெரிகிறது. தமன்னா கடத்தப்பட்ட மறுநிமிடமே வில்லன் வீட்டு வாசலில் நிற்கும்போது காதல் தெரிகிறது. ‘நீ நினைக்கிற மாதிரி நான் புறா இல்லடா சுறா’ என்று வில்லனிடம் அதிரும்போது கடுமை தெரிகிறது. காதலி வீட்டு மாடி ஏற ஏணி கொடுத்து உதவும் வடிவேலுவிடம், ‘அண்ணா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்கன்ணா’ என்று திரும்ப திரும்ப கூறும்போது காமெடி தெரிகிறது.

இப்படி ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தியிருப்பதில் விஜய்யின் முழு திறமையும் தெரிகிறது.  இதுவரை தனி நபர்களுக்காக போராடி வந்த விஜய், இந்த படத்தில் மக்களுக்கான போராட்டத்தை நடத்துகிறார். அதனால் சமூககேடுகளை ஆங்காங்கே புட்டு புட்டு வைக்கிறார். ரேஷன் கார்டை அடகு வாங்கும் கந்துவட்டிக்காரன், ஆசை நாயகி வீட்டில் தங்கும் போலீஸ் அதிகாரி, கொடுத்த வாக்கை காப்பாற்றாத அரசியல்வாதி, பொய்யை நம்பி வாதாடும் வழக்கறிஞர், அரசியல்வாதிக்கு அடிபணிந்து போகும் அதிகாரி என போகிற போக்கில் பொறிதட்ட புரட்டிவிட்டுப்போகிறார்.

அனல் பறக்கும் வசனங்களும், பரபரக்கும் பஞ்ச் டயலாக்குகளும் கைதட்டலை அள்ளிச் செல்கிறது. துவக்கப்பாடலில் இருந்து வெளிநாட்டு டூயட் வரைக்கும் விஜய்யின் நடன அசைவுகளை, நடனம் பயில்பவர்களுக்கு பாடமாக வைக்கலாம். குறிப்பாக ‘தஞ்சாவூரு ஜில்லாக்காரியில்...’ அவரின் புதுமையான நடன அசைவுகளின்போது இமைகள் இமைக்க மறுக்கிறது.  ‘நான் செத்த பிறகு, என் உடம்பை மீடியாலாம் போட்டோ எடுக்கும். அப்போ என் முகம் டல்லாயிடக் கூடாதில்ல’ என்று தற்கொலைக்கு முன், மேக்&அப் போட்டதின் காரணத்தை சொல்வதிலிருந்து ஆரம்பமாகிறது தமன்னாவின் கலாட்டா.


தூக்குப்போட்டு தற்கொலை செய்யும்போது செல்ல நாய்க்கும் தூக்கு கயிறு ரெடி பண்ணி வைப்பது என்று தமன்னா இதுவரை காட்டாத காமெடி முகம் கலர்புல் கலகலப்பு. காஷ்மீர் ஆப்பிள் மாதிரியான தமன்னா கடல் சுறாவை காதலித்து கனவுகளில் ஆடும் டூயட்டுகள் கோடைக்காலத்துக்கேற்ற குளிர்ச்சி ஏரியாக்கள். ‘சிறகடிக்கும் நிலவு...’ பாடலில் தமன்னாவின் அசைவுகள் கிக் டைப். ஜாலி டூயட்டும், டப்பாங்குத்துமாக படத்துக்கு இசையலங்காரம் செய்திருக்கிறார் மணிசர்மா.  தனது குடோனில் அந்நியன் ஒருவன் நுழைந்திருப்பதை வாசனையை வைத்தே உணரும் அதிரடி வில்லனாக அறிமுகமாகியிருக்கிறார் தேவ் கில். ஒவ்வொரு முறையும் வீரத்துடன் திட்டம் போடுவதும், அவை தோற்கும்போது ஆத்திரத்தில் அலறுவதிலுமாக வில்லன் வேலையை கச்சிதமாக செய்கிறார். ‘பருத்தி வீரன்’ சுஜாதாவுக்கு ஹீரோவின் அம்மாவாக புரமோஷன் கிடைத்திருக்கிறது.

அந்த கால சுஜாதா இல்லாத குறையை போக்கியிருக்கிறார்.  படத்தின் இன்னொரு ஹீரோ என்று வடிவேலுவைச் சொல்லலாம். அந்த அளவுக்கு காமெடி காக்டெய்ல் விருந்து வைக்கிறார். காலையில் நடக்கும் படகுபோட்டிக்கு மாலையில் போய் சேர்வதில் தொடங்குகிறது அவரது அலப்பறை. கடலில் குதித்து தண்ணீர் குடித்து மயங்கிக் கிடக்கும் தமன்னா வயிற்றை அமுக்கி, தண்ணீரை வெளியேற்ற விஜய் முயற்சிக்கிறார். ‘இந்த புனித பணியில என் பங்கும் இருக்கணும்னு விரும்புறேன்’ என்று வடிவேலும் உதவப்போக, திடீரென விழிக்கும் தமன்னா, ‘இது என்ன தண்ணீர் தொட்டியா?‘ என்று வயிற்றை காட்ட சிரிப்பில் அலறுகிறது தியேட்டர்.
 
இப்படி காட்சிக்கு காட்சி வடிவேலுவின் ‘வெடிவேலு’ அவதாரம் அதிகம்.  மீனவர்களுக்கு வீடுகட்ட, வில்லனின் கடத்தல் கப்பலையே மும்பைக்கு லவட்டிக் கொண்டுபோய் 100 கோடி ரூபாய் சம்பாதிப்பது, குடியிருந்த இடத்துக்கு கலெக்டர் ஆதாரம் கேட்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் அதை கச்சிதமாக எடுத்துக் கொடுப்பது, புதிய வீடுகளை தகர்க்க குண்டு வைத்து விட்டு விஜய்யை கட்டி வைத்து அடித்து கொக்கரிக்கும்போது வில்லனுக்கு விஜய் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட் என்று இயக்குனர் எஸ்.பி.ராஜகுமாரின் விறுவிறு திரைக்கதையும், இயக்கமும் படத்தை டாப் கீயரில் கொண்டு செல்கிறது. மணிசர்மாவின் பின்னணி இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் படத்தின் வேகத்துக்கு சக்கரமாக உதவியிருக்கிறது.
Thursday, May 20, 2010 | 0 comments

ராவணன் படத்தின் அறிமுக விழாவில் லைவ் டான்ஸ் ஆடி அசத்திய விக்ரம்!

Written By Raveendran on Sunday, May 16, 2010 | Sunday, May 16, 2010

மணிரத்னத்தின் படங்களே பெரும்பாலும் மௌனமாகத் தான் பேசிக்கொள்ளும் என்ற நிலையில் தன் படங்கள் பற்றி மணிரத்னம் எப்போதுமே பெரிதாகப் பேசுவதில்லை. இருந்தாலும் இப்போது இரு மொழிகளில் அவர் இயக்கி முடித்திருக்கும் ‘ராவணன்’ படம் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் நாடு முழுக்கவே பற்றிக் கொண்டிருக்கிறது. 




தமிழில் ஹீரோவாக, அதாவது வில்லனைப் போன்ற ஆன்ட்டி ஹீரோவாக விக்ரம் நடிக்க, போலீஸ் அதிகாரியாக பிரித்விராஜும், அவரது மனைவியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருக்கிறார்கள். விக்ரமின் தங்கையாக பிரியாமணி நடிக்க, அபிஷேக் பச்சன் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். இதேபோல் இந்தியில் விக்ரம் நடிக்கும் வேடத்தில் அபிஷேக் பச்சனும், போலீஸ் அதிகாரி வேடத்தில் விக்ரமும் அவர் மனைவியாக ஐஸும் நடித்திருக்கிறார்கள். தமிழிலும், இந்தியிலுமாக விக்ரமிடமும், அபிஷேக்கிடமும் மாட்டிக்கொண்டு அல்லல்படும் பொதுவான வேடத்தில் ஐஸ்வருகிறார்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்படும் ‘ராவணன்’, கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்படவிருக்கிறது. மும்பை ஆடியோ வெளியீட்டு விழாவில் அபிஷேக் ஆடிய லைவ் டான்ஸைப் பார்த்து பல பேர் மகிழ்ந்தனர். இதே போல் தமிழில் ராவணன் படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது. நிகிழச்சியில் அபிஷேக் போல விக்ரம் ஆடிய லைவ் டான்ஸைப் பார்த்து பல பேர் மகிழ்ந்தனர். விழாவில் கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், படத்தின் நாயகன் விக்ரம், பிருத்விராஜ், கார்த்திக் மற்றும் பிரபு பல பேர் கலந்துக் கொண்டனர்.


Sunday, May 16, 2010 | 0 comments