Hi quest ,  welcome  |  sign in  |  registered now  |  need help ?

தில்லாலங்கடி விமர்சனம்

Written By Raveendran on Saturday, September 25, 2010 | Saturday, September 25, 2010

http://www.mirchigossips.com/wp-content/uploads/2009/09/thillalangadi-movie-stills-05.jpg
நடிகர்கள்
ஜெயம் ரவி, தமன்னா, வடிவேலு, பிரபு, ஷாம், ராதாரவி, சுஹாசினி, நளினி, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூர் அலிகான்
இசை

யுவன்சங்கர்ராஜா
இயக்கம்

ஜெயம் ராஜா
தயாரிப்பு

மோகன்
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற "கிக்" படத்தின் ரீமேக்தான் இந்த தில்லாலங்கடி.
எதிலும் ஒரு கிக்கை எதிர்பார்ப்பவர் ஜெயம் ரவி. இப்படி அனைத்திலும் ஒருவிதமான கிக்கை தேடி அலைவதால் அவரால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடிவதில்லை. காதலும், கண்டவுடன், ஹீரோயிசத்தால், அனுதாபத்தால் வந்து விடக் கூடாது கிக்குடன் வரவேண்டும் என்று நினைக்கிறார். ரவியின் இந்த கிக் பிரச்சினையால் காதலை உதறிவிட்டு மலேசியாவுக்கு சென்று விடுகிறார் தமன்னா. கிக்கிலேயே பெரிய கிக், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என்பதை ஒரு சம்பவம் ரவிக்கு உணர்த்த, அவரது வாழ்க்கை பாதை மாறுகிறது. தமிழ்நாட்டில் பிரபலமான போலீஸ் அதிகாரி ஷாம். அவரின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய திருடன் மலேசியாவில்தான் இருக்கிறான் என்பதை அறிந்து அவனைத் தேடி மலேசியா வருகிறார். ஷாமுக்கும், தமன்னாவிற்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. ஷாம் தேடும் திருடனும், தமன்னாவின் இதயத்தை திருடியவரும் ஜெயம்ரவிதான். இந்த மூவருக்குமான தில்லாலங்கடி ஆட்டந்தான் மீதிக் கதை.
காதல், ஆக்ஷன் என இருந்த ஜெயம் ரவி, இப்படத்தின் மூலம் காமெடியிலும் கலைகட்டுகிறார். தன் நண்பன் காதலிக்கும், எம்எல்ஏ நளினியின் மகளுக்கும், தனது நண்பனுக்கும் திருட்டு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யும் ரவி, அதே திருமணத்தை பற்றி தானே எம்எல்ஏவுக்கு போட்டுக்கொடுப்பது என அறிமுக காட்சியையே அமர்க்களப்படுத்தி இருக்கிறார். மற்றவர்களிடம் காட்டும் தனது தில்லாலங்கடித்தனத்தை தன் காதலிலும் காட்டி, ரசிகர்களுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்திருக்கிறார்.
சிரிக்கிற தமன்னாவை விட கொதிக்கிற தமன்னாவே அதிக இடங்களில் வருவதால் நமக்கும் பிசகிக் கொள்கிறது மனசு. நல்லவேளை, தமன்னாவின் காஸ்ட்யூமர் புண்ணியத்தில் கன்னாபின்னாவென்று ஏறுகிறது கிக். ரவியை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக இவர் வடிவேலுவை லவ் பண்ணுவதும், அதை அவர் சீரியசாக எடுத்துக் கொள்வதும் ஜோக் தோரணம்.
தெலுங்கில் நடித்த அதே கதாபாத்திரத்தில் ஷாம், அதிர வைக்கும் காவல்துறை அதிகாரியாக படத்தில் களம் இறங்கும் இவரின் கதாபாத்திரத்திற்கு வேலை கொஞ்சம் என்றாலும் அதை சரியாக செய்திருக்கிறார். அலட்டல் இல்லாத இவரின் தேடுதல் வேட்டை படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இன்னும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.
அன்பான மனைவி அருகில் இருக்க மற்ற பெண்களுக்கு பிராக்கெட் போடும் ஜொள்ளு பார்ட்டியாக வடிவேலு வெடி வைக்கிறார். ரவியை வெறுப்பேற்ற தமன்னா, வடிவேலுவை காதலிப்பதாக சொல்ல அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வடிவேலு பெண் கேட்டுச் செல்வதும், கட்டிய மனைவியை போட்டுத் தள்ள திட்டமிடுவதுமாக அதிர வைக்கிறார். அவரும் மன்சூர் அலிகானும் நடத்தும் கூத்தில் தியேட்டர் சிரிப்பில் உருளுகிறது. பைத்தியக்கார டாக்டராக சந்தானம், எம்.எல்.ஏ. டிரைவராக சத்யன், மந்திரி பினாமியாக கஞ்சா கருப்பு, அடியாளாக மயில்சாமி என குரூப்பாக வந்து சிரிப்பை கொட்டிவிட்டுப் போகிறார்கள்.
பிரபு வெயிட்டை பார்த்தாவது கொஞ்சம் வெயிட்டான ரோல் கொடுத்திருக்கலாம். ஓரத்துல வச்ச ஊறுகாயா இருந்தாலும் சுர்ருன்னுதான் போவுது ராதாரவி போர்ஷன்.
கமர்ஷியல் படமாக இருந்தாலும், "சொல்பேச்சு கேட்காத சுந்தரியே..." என்ற பாடலின் மூலம் தன்னை ஒரு தொழில்நுட்ப இயக்குனராகவும் ராஜா நிருபித்திருக்கிறார். பி.ராஜசேகரின் ஒளிப்பதிவு மலேசியாவின் அழகை அள்ளி வந்து கொட்டியிருக்கிறது. காமெடி கலாட்டாவில் யுவன்சங்கர் ராஜாவின் காதல் பாடல்களில், இரண்டு மட்டுமே தேர்கிறது.
இல்லாதவர்களுக்கு இருப்பவர்களிடம் இருந்து எடுத்து கொடுக்கும் கதாநாயகன். இது தமிழ் சினிமாவில் பார்த்ததுதான் என்றாலும், அதை தன் திரைக்கதையின் மூலம் மறுபடியும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் ராஜா. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பையும், காமெடியையும் கலந்து அடிக்கும் ராஜாவின் திரைக்கதை ஜெட் வேகத்தில் பயணிக்கிறது.
லாஜிக்கை பார்க்காமல் இரண்டரை மணி நேரத்தை சிரித்து செலவழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தில்லாலங்கடியை தாராளமாக பார்க்கலாம்.
தில்லாலங்கடி - "கிக்"குக்கு பஞ்சமில்லை

0 comments:

Post a Comment