
'எந்திரன்' படத்தின் கதை தொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு 'எந்திரன்' படக் கதையை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ளது. சிதம்பரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பி.எஸ்.ஆர்னிகா நாசர் என்பவர் வழக்கறிஞர் ஆர்.கார்த்திகேயன் மூலம் இயக்குநர் ஷங்கர், சன் பிக்சர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆகியோரை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் விவரம்: நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாக பணி செய்கிறேன். நான் எழுதிய 31 நாவல்கள் மணிமேகலை பிரசுரம் மூலம் கடந்த 1992-ல் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான ரோபாட் தொழிற்சாலை என்ற நாவல் குமுதம் பதிப்பகத்தின் மாலைமதி என்ற தமிழ் இதழில் கடந்த 13.7.95-ல் வெளியிடப்பட்டது. இது தவிர, ஜிப்சா காத்திருக்கிறான் என்ற நாவல் 1992-ல் வெளியானது. அதில் ரோபோக்கள் தற்கொலை வெடிகுண்டாக பயன்படுத்தப்படுகின்றன என்று எழுதியுள்ளேன். 2001-ல் தோழன் என்ற பெயரில் வெளியான நாவலில் ரோபோக்களின் உறவுமுறை குறித்து எழுதியுள்ளேன். இந்தக் கதைகளை அப்படியே காப்பி அடித்தே இயக்குநர் ஷங்கர் 'எந்திரன்' படத்தைத் தயாரித்துள்ளார். அதை சன் பிக்சர்ஸ் நிறுவன இயக்குநர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் 28.10.10-ம் தேதி புகார் செய்துள்ளேன். ஆகவே, 'எந்திரன்' படக்கதையின் உரிமையாளர் நான்தான் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், எனக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கவும், அந்தப் படத்தைத் திரையிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்குத் தொடர்பாக எதிர் மனுதாரர்கள் விளக்கம் அளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை டிசம்பர் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
என்னோட கதைனு சொந்தம் கொண்டாடிட்டு இன்னும் எத்தன பேருதான் வரப்போறாங்களோ...?
0 comments:
Post a Comment